சென்னை: செப். 18-
கால்பந்து மைதானத்தில் 90 நிமிடங்களும் அனல் பறப்பது வழக்கம்; ஆனால், ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெற்ற தேசிய ஜூனியர் மகளிர் கால்பந்துப் போட்டியின் டயர்-1 ஆட்டத்தில் தமிழக வீராங்கனைகள் புயலாகவே மாறினர். இந்திய கால்பந்து கூட்டணி சார்பில் “டாக்டர் தாலி மீரான் ஏவோ கோப்பைக்கான” தேசிய கால்பந்துத் தொடர் ஆந்திராவில் நடந்து வருகிறது.
இந்தத் தொடரில், உள்ளூர் அணியான ஆந்திராவை எதிர்கொண்ட தமிழக அணி 12-1 என்ற இமாலய கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது.
எதிரணியை மூச்சுவிடக் கூட அனுமதிக்காமல் துவம்சம் செய்துள்ளது. களத்தில் இறங்கிய நொடி முதலே தமிழக வீராங்கனைகளின் கால்களில் பந்து மின்னலெனப் பாய்ந்தது. குறிப்பாக, பிரதிஷ்கா 4 கோல்களையும், ஜன ஸ்ரேயா மற்றும் தர்ஷினி தலா 3 கோல்களையும் விளாசித் தள்ளினர். ஒரே ஆட்டத்தில் மூன்று வீராங்கனைகள் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது கால்பந்து அரங்கில் கொண்டாடப்பட வேண்டிய ஓர் அபூர்வ நிகழ்வாகும். இவர்களுடன் அமிர்தவர்ஷினி மற்றும் கலையரசி தலா ஒரு கோல் அடித்து தமிழகத்தின் கோல் மழையை 12 ஆக உயர்த்தினர்.
ஆந்திர மண்ணில் தங்கள் அசுர பலத்தை நிரூபித்துள்ள இந்த இளம் சாம்பியன்களின் அடுத்த இலக்கு கர்நாடகா. வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் கர்நாடக மாநில அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது இந்தத் தமிழகப் படை. அனந்தபூர் மைதானத்தில் தமிழக கால்பந்து சூழலை மாற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.









