தமிழக விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் பதக்க மேடைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில், ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தின் பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், ஆசிய விளையாட்டு, பாரா ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் மற்றும் பாரா காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்குப் பயிற்சிக்காக ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதில் மாதம் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் அடங்கும். உயர்தரப் பயிற்சி, ஊட்டச்சத்து, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பது உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த உதவி பயன்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வீரர்களுக்கு நிதியுதவி வழங்குவதுடன், தமிழகத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பையும் நவீனப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விளையாட்டு மைதானங்கள் தற்போது பழமையான நிலையில் இருப்பதால், புதிய விளையாட்டு மைதானங்கள், நவீன பயிற்சி மையங்கள் மற்றும் மறுவாழ்வு மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
குறிப்பாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கென தனியான விளையாட்டு மையங்கள் இல்லாத நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருநங்கை வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.
விழாவின் தொடர்ச்சியாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம், வெள்ளிக்கு ரூ.50 லட்சம், வெண்கலத்திற்கு ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆசிய விளையாட்டு மற்றும் செஸ் ஒலிம்பியாட் சாதனையாளர்கள் உள்ளிட்ட 32 பேருக்கு மொத்தம் ரூ.8.57 கோடி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.
ஆசிய விளையாட்டில் மூன்று பதக்கங்கள் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.55 கோடி வழங்கப்பட்டது. கிரிக்கெட்டில் தங்கம் வென்ற கமலினி மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு தலா ரூ.75 லட்சம். விஷால், தென்னரசு, கயல்விழி மற்றும் அபய் சிங் தலா ரூ.80 லட்சமும், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் தலா ரூ.60 லட்சமும் பெற்றனர். வெண்கலப் பதக்கம் வென்ற பரணிகா இளங்கோவன், அபிநயா ராஜராஜன், ராஜேஷ் ரமேஷ், ஹரிஹரன், நேத்ரா குமணன் உள்ளிட்டோருக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும், தேசிய சப்-ஜூனியர் மகளிர் கூடைப்பந்து சாம்பியன் அணியைச் சேர்ந்த 12 வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.18 லட்சமும், பாரா ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு சிறப்பு நிதியுதவியும் வழங்கப்பட்டது.
நிதியுதவி முதல் பயிற்சி, உள்கட்டமைப்பு, தங்குமிடம் என வீரர்களுக்கு முழுமையான சூழலை உருவாக்கும் முயற்சியாக ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டம் பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் விளையாட்டு வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று, ஒலிம்பிக் அரங்கில் அதிக பதக்கங்களை வெல்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்காக உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.









